இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, நாடு முழுவதும் உள்ள 2,000 அரசு சேவைகள் டிஜிலாக்கர் மற்றும் இ-மாவட்ட தளங்களில் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின்-ஆளுமைப் பிரிவு (NeGD) இந்த ஒருங்கிணைப்புப் பணியை நிறைவு செய்துள்ளது.
இந்த விரிவான ஒருங்கிணைப்பு, டிஜிலாக்கரை இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக மாற்றியுள்ளது. இதன் மூலம் குடிமக்களுக்கு தரவுகளை பாதுகாப்பான முறையில் அணுகவும், அரசு சேவைகளை எளிமையாகப் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சேவை ஒருங்கிணைப்பில் முன்னணியில் உள்ள மாநிலங்களில், மகாராஷ்டிரா 254 சேவைகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து டெல்லி (123 சேவைகள்), கர்நாடகா (113 சேவைகள்), அசாம் (102 சேவைகள்) மற்றும் உத்தரப் பிரதேசம் (86 சேவைகள்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்த முயற்சி, குடிமக்களுக்குத் தேவையான பல்வேறு அரசு சேவைகளை டிஜிட்டல் முறையில் எளிதாகவும், பாதுகாப்பாகவும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது டிஜிட்டல் ஆளுகையை மேம்படுத்துவதற்கும், காகிதமில்லா நிர்வாகத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு பெரிய படியாகும்.