பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவையில் பாகிஸ்தானுடனான போர் நடவடிக்கைகள் ஏன் நிறுத்தப்பட்டன என்பது குறித்தும், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்தும் விளக்கமளித்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த விவாதத்தை ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசினார்.
அவர் தனது உரையில், நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 'ஆபரேஷன் சிந்தூர்' இந்தியாவின் இறையாண்மையின் அடையாளம் என்றும், இந்தியாவின் நடவடிக்கைகள் முற்றிலும் தற்காப்பு நோக்கங்கொண்டவை என்றும், ஆத்திரமூட்டும் அல்லது எல்லையை கைப்பற்றும் நோக்கங்கொண்டவை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், மே 10, 2025 அன்று அதிகாலை 1.30 மணியளவில், பாகிஸ்தான் ஏவுகணைகள், ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் பிற நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியா மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் எஸ்-400 ஆகாஷ் வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானின் தாக்குதலை முற்றிலுமாக முறியடித்தது என்றும், இதனால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் 22 நிமிடங்களில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது, இந்திய ஆயுதப்படை ஒன்பது பயங்கரவாத தளங்களின் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியது.
மே 10 ஆம் தேதி, பாகிஸ்தானில் உள்ள பல விமானநிலையங்களில் இந்திய விமானப்படை கடுமையாகத் தாக்கியபோது, பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு, போர் நிறுத்தத்துக்கு முன்வந்தது. அப்போது, இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்ற எச்சரிக்கையுடன் போர் நிறுத்தத்தை இந்தியா ஏற்றுக்கொண்டது என்றும், எதிர்காலத்தில் பாகிஸ்தானின் தரப்பில் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.