தொழிலாளர் கொள்கை வரைவு வெளியீடு: பெண்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்
மத்திய அரசு, பெண்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான புதிய தொழிலாளர் கொள்கை வரைவை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு கொள்கையின்படி, 2030 ஆம் ஆண்டுக்குள் பெண்களின் பங்களிப்பை 35 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இளைஞர்களுக்கான தொழில்முனைவு மற்றும் அதற்கான வழிகாட்டுதல் முயற்சிகளை விரிவாக்குவதையும் இந்தக் கொள்கை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழிலாளர்கள் தங்கள் நலன்களை ஒரே தொகுப்பின் கீழ் பெற்று பயனடைய உதவும் வகையில், EPFO, ESIC, PM-JAY, இ-ஷ்ரம் மற்றும் மாநில நல வாரியங்களை ஒருங்கிணைத்து ஒரு யுனிவர்சல் சமூகப் பாதுகாப்பை உருவாக்குவதையும் இந்த வரைவு கொள்கைத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. திறன் இந்தியா, தேசிய பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம், பிரதமரின் கவுசல் விகாஸ் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதை 'ஷ்ரம் சக்தி நிதி 2025' இலக்காகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் 9 பிரிட்டிஷ் பல்கலைக்கழக வளாகங்கள் அமைக்கத் திட்டம்
இந்தியாவில் ஒன்பது பிரிட்டிஷ் பல்கலைக்கழக வளாகங்கள் திறக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் இந்தியப் பயணத்தின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த முயற்சி இந்தியா-பிரிட்டன் கல்வி ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்கப் படியைக் குறிப்பதோடு, இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் இணைகிறது. புதுமை, திறன் மேம்பாட்டை அதிகரிக்கக் கூட்டு ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை தொழில் கூட்டாண்மைகளை ஊக்குவிக்கும் அதேவேளையில், இந்திய மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் உலகத்தரம் வாய்ந்த கல்வியை அணுகுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. சௌத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் குருகிராம் வளாகம் ஏற்கெனவே திறக்கப்பட்டு, முதல் தொகுதி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மும்பையில் ஒரு நிறுவன வளாகத்தைத் திறப்பதற்குப் பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளதுடன், 2026-ல் மாணவர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்புக் கொள்கை 2025
கர்நாடக அமைச்சரவை, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் 'மாதவிடாய் விடுப்புக் கொள்கை 2025'-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது பெண் ஊழியர்களின் நலனை மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.